Jan 12, 2014

ஹிட்லரை சுடாமல் விட்டவர்

முதல் உலகப்போர் முடிவடையும் சமயம். ஹென்றி டாண்டே என்பவரின் படையினரிடம் சிக்கினர் ஜெர்மானிய படைவீரர்கள் சிலர். அதில் அடிபட்ட ஒரு வீரனை நோக்கி துப்பாக்கி உயர்த்தப்படுகிறது. அடிபட்டவர்கள், நிராயுதபாணிகளை கொல்லக்கூடாது என்பது யுத்த தர்மங்களில் (I hate this oxymoron) ஒன்று. கண நேரக்கருணை. துப்பாக்கி இற(ர)க்கப்படுகிறது. அந்த வீரன் தப்புகிறான்.

இருபத்திரண்டு வருடங்கள் கழித்து தான் தப்பிக்க விட்டது ஹிட்லர் என்பதை அறிந்து வருந்துகிறார் ஹென்றி. ஒரு துப்பாக்கி அழுத்தில் பல லட்சம் உயிர்களை காப்பாற்றியிருக்க முடியுமே எனும் பதைப்பு. இந்த செய்தியெல்லாம் பொய்யாக கூட இருக்கக்கூடும். ஆனால் வரலாற்றில் இந்த கேள்வி அடிக்கடி எழும்புவதுண்டு - 'ஒரு வேளை அப்படி ஆகியிருந்தால்?'. ஆனால் வரலாற்று அறிவு இந்த கேள்வியை விட முக்கியமான கேள்வியை நம்மை கேட்க வைக்கிறது, 'இனி அப்படி நடக்காமல் தடுப்பது எப்படி?'. வெறுப்பை மையமாக வைத்திருக்கும் எதையும், எவரையும் நிராகரிப்பதே அதற்கான பதில்.

இப்படி 'ஒரு வேளை' கேள்வியை கற்பனையாக்கி டெரண்டினவ் எடுத்த படம் 'Inglourious Basterds'. ஏனோ அந்தப்படம் கருத்தியல் ரீதியாக எனக்கு பிடிக்கவில்லை.  அமெரிக்கர்களின் அடுத்த நாட்டை 'காப்பாற்றும்' நல்லெண்ணத்தை விதந்தோதுவதாக அப்படத்தை புரிந்து கொண்டதால் கூட இருக்கலாம் (பின்னாலேயே வந்த ஜாங்கோ அவரை மீண்டும் பிடித்தவராக்கியது).

எதிலோ ஆரம்பித்து எங்கோ போயாகிவிட்டது. ஓகே. அடுத்த மனிதரை எக்காரணம் கொண்டும் கொல்லக்கூடாது என்ற கருத்துடைய எனக்கு முன் இப்படி சுட (அவன் ஹிட்லர் தான் என்று தெரிந்து) ஒரு வாய்ப்பு வந்தால் ஹிட்லரை சுடுவேனா?

தெரியவில்லை.

12/365


No comments: