Jan 16, 2014

ரோசெட்டா

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழித்து ரோசெட்டா விழிக்கப்போகிறாள்! இன்னும் மூன்று நாட்களில். கண் விழிக்கப்போவது யாருடைய முகத்தில் தெரியுமா? பூமியெல்லாம் உருவாவதற்கு முன்னமே திரிந்து கொண்டிருந்த ஒரு வால் நட்சத்திரத்தில்! இதுவரை எந்த விண்கலமும் ஒரு வால் நட்சத்திரத்திடம் இத்தனை நெருக்கம் காட்டியதில்லை. வால் நட்சத்திரங்கள் மூலமாகவே பூமியில் உயிர்கள் தோன்ற தேவையான மூலப்பொருட்கள் கிடைத்ததாக பரவலான கருத்து உண்டு. இந்த ரோசெட்டா விண்கலம் மூலம் இந்த கருப்பொருள் கருதுகோள் பற்றி தீர்மானமாக ஒரு கருத்தை பெறலாம் (கரு கரு).

ஐரோப்பாவின் விண்வெளி நிறுவனத்தின் இருபதாண்டு கனவான இத்திட்டத்தின் சிறப்பம்சம், ஒரு குட்டி லேண்டர்! திட்டம் மட்டும் சரியாக நடந்தால் வால் முளைத்து ஓடும் ஐஸ் பாறையின் மீது இறங்கும் முதல் மனிதப்பொருள் அதுவாகவே இருக்கும். அந்த பொடியனுக்கு பெயர் ஃபைலே.

இந்த விண்கலத்திற்கு ரோசெட்டா என்று பெயர் வைத்தது கூட மிகப்பொருத்தம். எகிப்திய நாகரிகத்தை பற்றி கண்டறிய காரணமாக அமைந்தது தற்செயலாக கண்டெடுக்கப்பட்ட ஒரு கல். அதன் பெயர் ரோசெட்டா கல். அதே மாதிரி மனித நாகரிகத்தின் மூலத்தை இந்த ரோசெட்டாவின் மூலம் தெரிந்துகொள்ள முடியுமா என்பது இன்னும் ஒரு வருடத்தில் தெரியும்.

16/365


No comments: